18 மாதங்களுக்கு முன் உயிரிழந்த நபர் உயிருடன் மீண்டு வருவார் என அவரது உடலுடன் மனைவி மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ராவத்பூர் பகுதியை சேர்ந்த விம்லேஷ் குமார் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ம் தேதி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருமானவரித்துறை ஊழியரான விம்லேஷ் குமாரின் உடல் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொண்ட குடும்பத்தினர் விம்லேஷின் உடலை அடக்கம் செய்யமால் வீட்டிலேயே வைத்து உடலுடன் கடந்த 18 மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், விம்லேஷ் குமார் உயிரிழந்தபோதும் அவரது குடும்ப ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்கள் எந்த வித முன்னேற்றமும் இன்றி அலுவலகத்திலேயே தேங்கி கிடப்பதாகவும், இதில் சந்தேகம் உள்ளதாகவும் இது குறித்து விசாரிக்கும்படி கான்பூர் வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து தலைமை மருத்துவ அதிகாரிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று போலீசார், மருத்துவக்குழுவினர் விம்லேஷ் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போதும், விம்லேஷ் உயிருடன் உள்ளதாகவும், அவர் கோமாவில் உள்ளதாகவும் குடும்பத்தினர் அதிகாரிகளிடம் தெரிவித்தைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, வீட்டில் உள்ள ஒரு அறையில் கிட்டத்தட்ட அழுகிய நிலையில் விம்லேஷின் உடல் படுக்கையில் வைக்கப்பட்டிருந்தது பின்னர், அந்த உடலை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விம்லேஷ் குமாரின் மனைவியிடம் விசாரணை நடத்தியத்தில் அவர் மனநலம் தொடர்பான பிரச்சினையில் இருப்பதை கண்டறிந்த மருத்துவத்துறையினர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர்.