ஐசிசி உலகக் கோப்பை போட்டிக்காக 4 லட்சம் டிக்கெட்டுகள் தயாராக உள்ள நிலையில், நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி கடந்த 2019-இல் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளாக பிசிசிஐ போட்டிக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தது.
அதன்படி 13ஆவது ஒருநாள் உலகக் கோப்பை தொடர் போட்டிகள் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மொத்தம் 45 நாட்கள் இந்தியாவில் நடைபெற உள்ள, இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
கடந்த முறை இறுதி ஆட்டத்தில் மோதிய இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் அக். 5-ஆம் தேதி தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன.
இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் தயாராக உள்ளன. ரசிகா்கள், அதிகாரபூர்வ இணையத்தில் டிக்கெட்டுகளை வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.