ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் ஓரளவும் கட்டுப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக, தமிழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி பயிலும் இருவருக்கு, சில தினங்களுக்கு முன்பு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைடுத்து, தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் 235 பேருக்கும் சுகாதாரத் துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 21 மாணவிகள், 8 மாணவர்கள் என 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், தொற்று எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து கொரோன தொற்று அதிகரித்து வருவது மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.