பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. வளசரவாக்கத்தில் அவர் நடித்து வரும் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக பெரும் பேசுபொருள் ஆன அவருடைய வசனங்கள் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
இயக்குநர், நடிகர் என வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட அவருடைய பயணம் குறித்து இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம்.
ஆதி குணசேகரன் ஆக தமிழ் மக்கள் அனைவருக்கும் பரீட்சாயமான நடிகர் மாரிமுத்து தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பசுமலை கிராமத்தைச் சேர்ந்தவர். கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக பிரபல்யயமானவர். சிறு வயதில் திரைப்பட இயக்குநராக விரும்பிய மாரிமுத்து 1990 ஆம் ஆண்டு, தனது வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவந்தார். துவக்கத்தில் உணவகங்களில் பணியாளராக வேலை செய்த இவர் பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக இணைந்து அவரது படங்களான அரண்மனைக்கிளி (1993), எல்லாமே என் ராசாதான் (1995) படங்களில் பணிபுரிந்தார். பாடலாசிரியர் வைரமுத்துவுடன் இலக்கியம் வழியாக அறிமுகமானார். தற்போது அவரின் மரணத்திற்கு பின்பு கூட கவிஞர் வைரமுத்து, தன்னுடைய இரங்கலில் “நான் சொல்ல சொல்ல எழுதியவன்” என குறிப்பிட்டுள்ளார். மாரிமுத்து இயக்குநர் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். சிலம்பரசனின் மன்மதன் (2004) படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். இதையடுத்து 2008 ஆம் வெளியான கண்ணும் கண்ணும் படத்தில் இயக்குநராக அறிமுகமானார் மாரிமுத்து. இந்த படம் வணிக ரீதியாக சிறப்பான வெற்றியை ஈட்டவில்லை என்றாலும் விமர்சன ரீதியான பாராட்டை பெற்றது.
இதையடுத்து 2011 இல் வெளியான மலையாள திரைப்படமான சப்பா குரிஷு படத்தின் கதையைக் கொண்டு 2014 இல் புலிவால் படத்தை இயக்கினார். இவரது முந்தைய படத்தோடு ஒப்பிடுகையில் சற்று முக்கிய படமாக இப்படம் அமைந்தது.
முன்பாகவே 1999 ல் இருந்தே இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தினார். தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடிக்க தொடங்கிய மாரிமுத்து, வாலி படத்திலிருந்து தொடங்கி சிறு நடிகராக நடிக்க ஆரம்பித்து மிஷ்கினின் யுத்தம் செய் (2011) படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நடிகராக அறிமுகம் ஆனார். அதில் அவர் ஊழல் நிறைந்த காவல் அதிகாரியாக நடித்தார். படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆரோகனம் (2012), நிமிர்ந்து நில் (2014), கொம்பன் (2015) உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஷாலின் மருது (2016) படத்தில் இவரது நடிப்பானது இவரை கத்தி சண்டை (2016) படத்தில் ஒப்பந்தம் செய்ய தூண்டுதலானது. மாரிமுத்து பெரும்பாலும் காவல் அதிகாரியாகவே நடித்திருக்கிறார் என்ற பார்வை ஒருபுறம் இருந்தாலும் குடும்ப உறவு கதாபாத்திரங்களிலும் அவரது நடிப்பு மிக நேர்த்தியாக அமைந்திருக்கும். அதில் ஜீவா, கடைக்குட்டி சிங்கம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் இங்கு அவரது நடிப்பில் என்றும் நினைவில் நிற்கும் படங்கள். இதுபோக, உதயா (2004) ஆரோகணம் (2012), நிமிர்ந்து நில் (2014), ஜீவா (2014), கொம்பன் (2015), திரிஷா இல்லனா நயன்தாரா (2015), கிருமி (2015), உப்பு கருவாடு (2015), புகழ் (2016), மாப்ள சிங்கம் (2016), திருநாள் (2016), குற்றமே தண்டனை (2016), கொடி (2016), வீர சிவாஜி (2016), பைரவா (திரைப்படம்) (2017), எமன் (2017), யாக்கை (திரைப்படம்) (2017), கூட்டத்தில் ஒருத்தன் (2017), மகளிர் மட்டும் (2017), சண்டக்கோழி 2 (2018), மெஹந்தி சர்க்கஸ் (2019), நான் சிரித்தால் (2020), பூமி (2021), புலிக்குத்தி பாண்டி (2021), சுல்தான் (2021), அட்ராங்கி ரே (2021) உள்ளிட்ட 80- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக ஜெயிலர் படத்தில் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார். இந்தியன் 2 படத்திலும் அவரது பங்கு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் நடிகராகவும் இயக்குநராகவும் தனது பங்கை செலுத்தினாலும், மறுபுறம் சீரியல் நடிகராகவும், மூட நம்பிக்கை எதிர்ப்பாளராகவும் சமீப காலமாக மிகவும் பிரபலமடைந்தார். சமீபத்தில் ஜோதிடர்கள் VS ஜோதிடத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள் என்ற தலைப்பில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த ஒரு விவாத நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜோதிடத்திற்கு எதிராகவும், மூட நம்பிக்கைக்கு எதிராகவும் பேசியது சமூக வலைதளங்களில் ஒரு புறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்புகளையும் சம்பாதித்தார். குறிப்பாக தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிவரும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியலில் அவரது நடிப்பு தொணியும், இந்தாம்மா ஏய்..” என்கிற அடிக்கடி பயன்படுத்துகிற வசனமும் சமூக வலைதளங்களில் டிரெண்ட்டாகியது. இதன் மூலம் சமூக வலைதளங்களின் மீம் ஸ்டாராகவும் வலம் வந்தார் மாரிமுத்து. இப்படி பல்வேறு திறமைகளின் மூலம் திரைத்துறையில் தனக்கென முத்திரை பதித்து, ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உச்சத்தில் இருந்த மாரிமுத்துவின் மரண அழைப்பு கூட அவரது சீரியல் டப்பிங்கின் போது இருந்திருக்கிறது என்பதே அவர் திரைத்துறையையும் நடிப்பையும் அவர் எவ்வளவு நேசித்திருக்கிறார் என்பதற்கு சான்றாகியிருக்கிறது. நடிகர் மாரிமுத்துவின் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமல்ல.. அவரை சின்னத்திரையில் பார்த்து ரசித்த கோடான கோடி ரசிகர்களுக்கும் மீளாத்துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே எதார்த்த உண்மை..