இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஜி எஸ் எல் வி எஃப் 12(pslv-c- 12) ராக்கெட்டை வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தினர்.
ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தபடி அந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணுக்கு புறப்பட்டு சென்றது. இதற்காக மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் சரியாக 10 மணி 42 நிமிடங்களுக்கு ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தினார்கள்.
இந்த ஜி எஸ் எல் வி எஃப் 12 ராக்கெட் மூலம் 2,232 கிலோ எடை கொண்ட என் வி எஸ் 01 என்ற வழிகாட்டி செயற்கைக்கோள் புவி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சுற்றுவட்ட பாதையில் செயற்கை கோளை நிலை நிறுத்த அடுத்தடுத்து சுற்றுவட்டப்பாதையை உயர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் என் வி எஸ் 01 வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டமிடப்பட்டபடி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
அடுத்த தலைமுறைக்கான என் வி எஸ் வரிசை சாட்டிலைட்டுகள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்க வைத்து மேம்படுத்தும் திறன் படைத்தவை ஆகும். இதற்காக இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக எல் ஒன் பேண்ட் சிக்னல்களை இவை உள்ளடக்கி வைத்துள்ளன. வாகனங்களை வழி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட இரண்டாவது தலைமுறை செயற்கைக்கோள்களில் இந்த என் வி எஸ் வரிசை செயற்கைக்கோள்கள் முதன்மையானவை ஆகும்.
இந்த வழிகாட்டி செயற்கைக்கோள் தரை, கடல், வான் போக்குவரத்தை கண்காணிக்கும் திறன் படைத்ததாகும். பேரிடர் காலங்களில் இந்த செயற்கைக்கோள் துல்லியமான தகவல்களை தெரிவிக்க பெரிதும் பயன்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.