இந்தியாவில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது .
மகளிருக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது . இதில் நடப்பு சாம்பியனான ஜப்பான், 3 முறை சாம்பியனான தென்கொரியா, முன்னாள் சாம்பியனான இந்தியா மற்றும் சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 சிறப்பான தரமான அணிகள் பங்கேற்று விளையாடியது .
இதில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதியது . ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது .
நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணியின் சங்கீதா குமாரி , நேகா , லால்ரெம்சியாமி , வந்தனா கட்டாரியா ஆகியோர் தலா ஒரு கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு பெரும்பங்காற்றி உள்ளனர்.
இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் அசத்தி வந்த இந்திய அணி இறுதி போட்டியிலும் சிறப்பாக விளையாடி மீண்டும் ஒரு முறை தங்களது பலத்தை உலகிற்கு காட்டியுள்ளது .
இதுமட்டுமல்லாமல் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி . ஏற்கனவே 2016ம் ஆண்டில் சீனாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.