உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாட்டின் தேசிய விளையாட்டாக பார்க்கப்படுவது ஹாக்கி விளையாட்டு . இன்றைய இந்தியாவின் இளைய தலைமுறைகள் பல துறைகளில் தங்களது கால்தடத்தை அழுத்தமாக பதித்து கலக்கி வரும் நிலையில் விளையாட்டு துறையிலும் பல சாதனைகளை படைத்து வருகின்றனர் . அதிலும் குறிப்பாக ஹாக்கி விளையாட்டில் ஆண்கள் , பெண்கள் என இருவரும் பல சாதனைகளை படைத்துள்ளனர்.
அந்தவகையில் ஜப்பானின் ககாமிகஹரா நகரில் நடைபெற்ற 8வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டியில் வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா – தென்கொரியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி முன்னிலை வகித்தது .
அதிரடியாக விளையாடிய இந்திய அணி தென்கொரியா அணியை முழுவீச்சில் எதிர்கொண்டது . இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது . ஆசியக் கோப்பை ஜூனியர் பெண்கள் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையும் அறிவிக்கப்ட்டுள்ளது. ஜுனியர் ஹாக்கி அணியின் வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சமும் , துணை பணியாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.
இந்நிலையில் இதுவரை இல்லாமல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் ஜூனியர் அணிக்கு நாட்டின் பிரதமர் உளப்பட பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .