புதுச்சேரியில் பரவி வரும் புதிய வகை வைரஸ் காய்ச்சலால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் இந்தியாவில் பரவி வரும் சூழலில், இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் மற்றும் முதியோர் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, இதனை தடுக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் பொது இடங்களில் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், தும்மல் மற்றும் இருமல் இருந்தால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு அறிவுறுத்தியுள்ளார்.
காய்ச்சல், தும்மல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை அணுகவும் நெரிசலான இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்குமாறும் சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும், அரசு பொது மருத்துவமனை, கோரிமேடு மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் போதுமான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் புதுச்சேரி மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.