சீனாவில் சாகசம் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ போட நினைத்த இன்ஸ்டா பிரபலம், 68-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 30 வயதான ரெமி லூசிடி தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். இதற்காக, இவர் உயரமான கட்டிடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அப்படி தான் செய்யும் சாகச நிகழ்வுகளை புகைப்படங்கள் மற்றும் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்டும் வந்துள்ளார். இதனால், இவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம், ரெமி லூசிடி ஹாங்காங்கில் உள்ள டிரெகன்டர் டவர் எனும் மிக உயரமான கட்டிடத்தில் ஏறி படம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த லிப்ட் மூலமாக மேலே ஏறி சென்று 68-வது மாடியின் சில ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது அங்கிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்குள்ள பணிப்பெண் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் அவரின் கேமரா மற்றும் பாஸ்போர்ட்டு கிடைத்த நிலையில், அதன் மூலமாக அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செலஃபி மோகத்தால் இன்ஸ்டா பிரபலம் 68வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.