எதிர்நீச்சல் சீரியலில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் நடிகர் மாரிமுத்து நெஞ்சுவலி குறித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் தனி இடம்பிடித்த மாரிமுத்து, அதற்கு முன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு வந்து படங்களை இயக்கினார். ஆனால், அதில் கிடைக்காத வெற்றி இந்த ஒரே ஒரு சீரியல் மூலம் அவருக்கு கிடைத்தது.
கடந்த ஓராண்டில் மட்டும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் பற்றி சோசியல் மீடியாக்களில் போடப்படாத மீம்ஸே இல்லை. மீம் கிரியேட்டர்களுக்கு ஏகப்பட்ட கண்டெண்ட் கொடுத்து வந்தார் மாரிமுத்து.
இதனால், தற்போது புகழின் உச்சிக்கே சென்ற மாரிமுத்து இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இவரின் மரணம் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆதி குணசேகரனின் மறைவுக்கு ஏராளமான பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்த காட்சி ஒன்று தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ காட்சியில், மாரிமுத்துவும் அவரது தம்பியும் காரில் செல்லும் போது தன் தம்பியிடம், “நெஞ்சில வலி வந்து அழுத்துது, அப்பப்போ வருது, அது உடம்புல வர்ற வலியா இல்ல மனசுல வர்ற வலியானு தெரியலப்பா. அப்பப்ப வலி வந்து எனக்கு எச்சரிக்கை பண்ணுதுனு தோணுது. எதோ கெட்டது நடக்கப்போகுதுனு தோணுதுப்பா எனக்கு. அதான் நெஞ்சுவலி மாதிரி வந்து எனக்கு காட்டுது. அது மணி அடிச்சு என்ன எச்சரிக்கை பண்ணுதுடா. ஏதோ மாறி மாறி பேசுறேன்ல, எனக்கே தெரியுது” என்று பேசி இருக்கிறார்.
இந்த வீடியோ காட்சி தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோ பார்ப்பவர்களை கண் கலங்கச் செய்கிறது.