AIADMK PMK Alliance | மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியுடன் அதிமுக – பாமக இடையே கூட்டணி உறுதியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்ட் டவுன் துவங்கியுள்ள நிலையில், தங்கள் கூட்டணி பலத்தை உறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன அரசியல் கட்சிகள். அந்த வகையில், தேமுதிக, பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வந்தது அதிமுக. இதில், தற்போது பா.ம.க.வுடன் தேர்தல் கூட்டணி உறுதியாகியுள்ளதாகவும்,
விரைவில் அதிகாரபூர் அறிவிப்பு வெளியாகும் எனவும் பரபரப்பாக பேசப்படும் நிலையில், “தலைக்கு மேல் தொங்குது கத்தி..!” என பயமுறுத்துகிறதாம் தேசியக் கட்சி..!1989 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, முதன்முதலாக 1991ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட துவங்கியதில் இருந்தே அரசியலில் தொடர்ச்சியாக தன்னுடைய பிரதி நிதித்துவத்தை நிரூபித்து வந்த பா.ம.க. சராசரியாக 5% வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டே வந்தது.
இறுதியாக 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவைக்கு அனுப்பியபோதும், எப்போதும் இல்லாத அளவிற்கு அதன் வாக்கு வங்கியானது 3.8 சதவீத்ததிற்கு சறுக்கியது. இருந்தாலும், முதல்வர் கனவோடு வலம்வந்த அன்புமணி இந்தமுறை எப்படியும் எம்.பியாகி, பழையபடி மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
எனவே, இந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என நம்பப்படும் பா.ம.க.வோடு கூட்டணி அமைத்து தனது கனவை நனவாகும் எண்ணத்தில் இருந்தார் அன்புமணி.அதே போல, கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளைக் கொடுத்து பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க பா.ஜ.கவும் முயற்சி செய்து வந்தாலும், அவர்கள் எதிர்பார்ப்பது போல, 1 மாநிலங்களவை எம்.பி. பதவி தரமுடியாத சூழலில் இருந்தது.
ஆனால், அவரது தந்தையான டாக்டர் ராமதாஸின் முடிவோ ஆரம்பம் முதல் வேறு மாதிரியாகவே இருந்தது. அதாவது, பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே பா.ம.க. இதுவரை எடுத்திருந்த நிலையில், பா.ஜ.க கூட்டணியில் இடம் பெறும் பட்சத்தில் தாங்கள் அதிக செல்வாக்கு செலுத்தி வரும் வட மாவட்டங்களிலும் கூட தங்களுடைய வாக்கு வங்கி சரியலாம் என கணக்கு போட்டிருந்தார் ராமதாஸ். பா.ம.க. மாநிலத்தலைவர் ஜி.கே.மணியின் நிலைப்பாடும் அதுவே.
இதையும் படிங்க: Port projects | தமிழகத்தில் ரூ.83,000 கோடி மதிப்பில் துறைமுகத் திட்டங்கள்!
அதே நேரத்தில், பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்ப்பதற்காக டாக்டர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் இருமுறை சந்தித்துப் பேசினார் அதிமுக முன்னால் அமைச்சரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சி.வி.சண்முகம். இந்நிலையில்தான், அந்த இரு கட்சிகளும் கூட்டணிக்கு இனக்கமான முடிவுகளை எடுத்திருப்பதாக கூறுகிறார்கள் ராயப்பேட்டையில் உள்ள மூத்த அதிமுகவினர்.
இது பற்றி நம்மிடம் பேசிய அவர்கள், கடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி, விழுப்புரம் தனி தொகுதி அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியது போல, இம்முறை தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் சிதம்பரம் விழுப்புரம் ஆகிய இரு ரிசர்வ் தொகுதிகளோடு மொத்தம் 7 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் கேட்டுள்ளது பாமக. போட்டியிடும் 7 தொகுதிகளுக்கும் கட்சித்தலைமை ஓ.கே. சொன்னாலும், ஒரேயொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி மட்டும்தான் இழுபறியாக உள்ளது. கூடிய விரைவில் சுமூக தீர்வு எட்டப்பட்டு முறைப்படி கூட்டணி அறிவிக்கப்படும்” என்றனர் அவர்கள்.
ஆனால், தைலாபுரத்து தகவல்களோ, ‘தலைக்கு மேல் கத்தி’ என தயங்கித்தயங்கி தகவல்களைக் கொட்டுகின்றன. அதாவது, இப்போதைய நிலையில் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கிறது அதிமுக. வட மாவட்டங்களில் பல இடங்களில் வெற்றியையும், வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்கும் பா.ம.க., கடந்த சில வருடங்களாக தென் மாவட்டங்களிலும் நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தருவது போல நடித்து விட்டு வழக்கு, நீதிமன்றம், தீர்ப்பு அதுஇதுவெனக் கூறி கைக்கு எட்டியதைவாய்க்கு எட்ட விடாமல் செய்து விட்டனர். எனவே, மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் அன்புமணிக்கு சிறிதும் விருப்பம் கிடையாது. அதற்கு பதிலாக, பிஜேபியுடன் சேர்ந்து ராஜ்யசபா சீட்டையாவது உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்பதே அன்புமணியின் விருப்பமாக உள்ளது. எனவே, இப்போதைக்கு கூட்டணி குறித்து எதையும் உறுதியாக சொல்ல முடியாது” எனக் கூறியதோடு, “உண்மைச் சொல்லப்போனா..” என இழுத்தபடியே நம் காதோடு காதாக அவர்கள் கூறியதுதான் இங்கே ஹை லைட்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1762731500725014572?s=20
அதாவது, கடந்த 2004 – 2009 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார் அன்புமணி ராமதாஸ்.
அவரது பதவிக் காலத்தில் உரிய கட்டமைப்புகள் இல்லாத சொல்ழலிலும் உத்தரப்பிரதேச மாநிலம் ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய 2 மருத்துவக் கல்லூரிகளுக்கு முறையற்ற அனுமதி கொடுத்திருந்ததாக அன்புமணி ராமதாஸ் உட்பட 15 பேர் மீது 2 வழக்குகளை பதிவு செய்திருந்தது சி.பி.ஐ. டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்த அந்த வழக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்புமணி உட்பட 10 பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம்.
அவ்வழக்கானது பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் நிலையில் ‘எலக்சன் ஸ்பெசலாக’ அந்த ஃபைலை தூசி தட்ட தயாராகி வருகிறதாம் சி.பி.ஐ. இந்த தகவல் அன்புமணியின் குடும்பத்தில் புளியை கரைக்கவே, அதிமுக கூட்டணியில் 7 இடங்களை வாங்கி தோற்றுப் போவதை விட, பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்தால் ராஜ்யசபா சீட்டு வாங்கி கேபினெட் அமைச்சராகவோ அல்லது இணை அமைச்சராகவோ கூட ஆகலாம்.
வழக்கைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை’ என ஃபீல் பன்னுகிறாராம் அன்புமணி. தற்போது, இந்தக் கூட்டணி கோல்டு வார் அன்புமணி – ராமதாஸ் குடும்பத்தில் புயலைக் கிளப்பி இருப்பதாகவும், விரைவில் ;பிஜேபியுடன் பாமக கூட்டணி’ என்ற தகவல் பிரேக்கிங் நியூஸாக வரலாம் எனவும் கூறுகிறார்கள் நமது தைலாபுரத்து சைலண்ட் சோர்ஸ்கள்.
ஆக, பலரும் கூறுவது போல அதிமுக – பாஜக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை என்பதே தற்போதைய நிலவரம்.