Dmdk | பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் 10 தினங்களே இருப்பதாக கூறப்படும் நிலையில் கூட்டணி தொடர்பான பிரேமலதா ஃபார்முலாவால் ரொம்பவே விரக்தியில் உள்ளனர் தேமுதிக தொண்டர்கள்.
திமுக, அதிமுக என்ற இருபெரும் கட்சிகளுக்கு மாற்றாக, ஆனால் அதே திராவிட சிந்தனையோடு துவங்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிட முற்போக்கு கழகமானது மறு ஆண்டே,
‘மக்களுடன் தான் கூட்டணி’ என்ற கொள்கைப்படி 2006 பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் தைரியமாக தனித்து நின்றே போட்டியிட்டு 8.4 சதவீத வாக்குகளைப் பெற்று இதர கட்சிகள்
அனைத்தையுமே மூக்கின் மீது விரல் வைக்க வைத்த்தோடு விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்தையும் முதன் முறையாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தது.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேமுதிக,
அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருந்தாலும் 10 சதவீத வாக்குகளை பெற்று அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்து இருந்தது.
அடுத்து, 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது 41 தொகுதிகளில் போட்டியிட்டு 7.9 சதவிகித வாக்குகளோடு 29 தொகுதிகளை வென்று
ஜெயலலிதா அமைச்சரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்து அசைக்க முடியாத ஆகப்பெரும் கட்சியாக கருதப்பட்ட திமுகவுக்கே அச்சத்தை ஏற்படுத்தியது.
ஆனால், சிறிது காலத்திலேயே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவோடு சட்டசபையில் ஏற்பட்ட உரசல் காரணமாக அதிமுக கூட்டணியில் விரிசல் விழவே,
அடுத்த நடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்து 16 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்ததோடு அதன் வாக்கு சதவீதமும் 6.1 ஆக குறைந்தது.
அடுத்து, 2016 சட்டமன்ற தேர்தலில் 2.4 சதவீதம் எனக்குறைந்த அதன்வாக்கு சதவீதமானது கடைசியாக நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலில் நோட்டாவை விட குறைவாக 0.43
சதவீதமாகி ஒட்டுமொத்த கட்சியும் எமர்ஜென்சி வார்டில் இருந்த போதுதான் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்தும் கடந்த ஆண்டின் இறுதியில் காலமானார்.
அதற்கு சில வாரங்களுக்கு முன்பே கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார் பிரேமலதா.
தற்போதைய நிலவரப்படி 0.43 சதவீதமோ அல்லது அதற்கும் குறைவாகவோதான் தேமுதிகவின் வாக்கு சதவீதம் இருக்கும் என கருதப்பட்ட நிலையில் விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த மக்களின் கூட்டத்தைப் பார்த்து புதுக்கணக்கு போட ஆரம்பித்தார் பிரேமலதா.
அதையே பாராளுமன்ற தேர்தலுக்கான ஃபார்முலாவாக மாற்றி, “எந்தக் கட்சி மக்களவையில் 14 இடங்களில் போட்டியிட வாய்ப்பும், 1 மாநிலங்கவையும் தருகிறதோ அந்தக் கட்சியுடன்தான்
கூட்டணி” என தங்கள் மா.செ.க்கள் கூட்டத்தில் முழங்க, எப்படியும் கூட்டணிக்கு வருவார்கள் என எதிர்பார்த்த அதிமுகவும், பாஜகவுமே அதைக்கேட்டு கொஞ்சம் ஜெர்க் ஆகித்தான் போனது.
இதையும் படிங்க :RIP santhan | உடல்நலக் குறைவால் சாந்தன் உயிரிழப்பு
பிரேமலதாவின் இந்த முடிவால் கூட்டணி பாதிக்கும் என கட்சி நிர்வாகிகள் பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவே,
“அதெல்லாம் மாவட்ட செயலாளர்களோட விருப்பம்தான். நான் இன்னும் முடிவெடுக்கவே இல்லை” என்று கூறி தன் சொந்தக் கட்சி மா.செ.க்களையே கிறுகிறுக்க வைத்தார்.
பின்னர், பா. ஜ.க.விடம் பேசும் போது கொஞ்சம் இறங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், மாநிலங்களவை சீட்டில் அவர் தீர்க்கமான முடிவோடு இருக்கவே, “சீட்டு தாராளமாக இருப்பதால் ஏராளமாக தரலாம்தான்.
ஆனால், வெறும் 4 எம்.எல்.ஏ.க்களை வெச்சுக்கிட்டு நாங்க எங்கே 1 மாநிலங்களவை சீட்டு தாறது..? என பா.ஜ.க தினறி நிற்க, “ஆனாலும், அவ்வளவெல்லாம் உங்களுக்கு ரொம்ப ஜாஸ்திங்க” என தனது தனது பாணியில் தாள்பாள் போடத் தயாரானார் எடப்பாடியார்.
அப்படியிருந்தும், “4 சீட் மட்டும் தாறோம். மேற்கொண்டு கொறிக்கிறதுக்கு கொஞ்சம் ஸ்வீட் காரம் வேணாலும் தாறோம்.
ஆனால், மாநிலங்களவை சீட் மட்டும் நோ” என அதிமுக தரப்பு கூற, “அக்கா அதுக்கு ஒத்துக்க மாட்டாங்க” என அந்த இடத்திலேயே சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம் எல்.கே.சுதீஷ்.
அதே நேரத்தில், ‘என் மண், என் மக்கள்’ நிறைவு விழாவிற்காக பிரதமர் மோடியும் தமிழ்நாட்டிற்கு வரவிருந்ததால், “அதற்குள் எப்படியும் கூட்டணியை முடிவு செய்து விடுவார் அண்ணாமலை.
அதனால், கேட்டது கிடைக்கும்” பிஜேபியுடன் மீண்டும் பேச்சு வார்த்தையை துவக்கவே, “அடுத்தும் நாமதான் மத்தியிலே ஆட்சியை பிடிக்கப் போறோம்.
வேணுங்கிறதை அப்போ பார்த்துக்கலாம். இப்போதைக்கு 4 மட்டும் ஒதுக்குறோம். வேற எதையுமே எதிர்பார்க்காதீங்க” என நறுக்கெனக் கூறிவிட்டதாம் பா.ஜ.க. இப்படி,
தன் தம்பியை மாநிலங்களவை எம்.பி. ஆக்கியே தீறுவது’ என்ற பிடிவாதத்தில் பிரேமலதா இருப்பதால்தான் எந்தக் கட்சியுடனும் இன்னும் கூட்டணியை அவர்கள் இறுதி செய்ய முடியவில்லை” எனக் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இந்த சூழலில்தான், “அக்கா, நமக்கு 4 கிடைச்சாலும், 7 கிடைச்சாலும் இந்த தேர்தல்ல நாம ஜெயிக்கிறது கஷ்டம். மாநிலங்களவை சீட்டும் கிடைக்காது.
சோ, அவங்களும் வேணாம், இவங்களும் வேணாம். இப்போதைக்கி திமுகவுக்கு நல்ல மவுசு இருக்கு. 2 சீட்டு கொடுத்தாலும் பரவாயில்லை…” என இழுக்கவே,
இதுவரை தம்பி பேச்சை தட்டாமல் கேட்டு கட்சி நடத்தி வரும் பிரேமலதாவும் கொஞ்சம் தனியாக உட்கார்ந்து யோசிக்கத் துவங்கியதாக கூறப்படுகிறது.
அதன் வெளிப்பாடாகத்தான், “தென்காசியில் டார்ச் அடித்து ரயிலை நிறுத்தி விபத்தை தடுத்த மூத்த தம்பதிகளுக்கு முதல்வர் ஸ்டாலில் 5 லட்ச ரூபாய் வெகுமதி வழங்கியதை பாராட்டுகிறோம்” என நேற்று ட்வீட்டினாராம் பிரேமலதா..!
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1762475035800068523?s=20
ஆக, திடீர் திடீரென திசை மாறும் தேமுதிகவின் அரசியல் காற்று திமுக பக்கம் வீசினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என்பதே தற்போதைய கள நிலவரமாக இருந்தாலும்,
‘தன் கணவரின் இறுதி சடங்கிற்கு வந்தவர்களின் எண்ணிக்கையையும் கூட தன்னுடைய அரசியல் பசிக்கு தீனியாக்குகிறார் பிரேமலதா’
என்ற எண்ணம் அனைத்து கட்சிகளிடமும் பொதுவாக காணப்படுவதால் தேமுதிகவுக்கு யாரும் சிவப்பு கம்பளம் விரிக்கப் போவதில்லை என்பதே நிதர்சனம்..!