ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 4வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த இந் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உலக நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ், டெல்டா, டெல்டா பிளஸ் என திரிபடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதோடு, கொரோனா தடுப்பூசிகளும் முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உள்ள நிலையில், டெல்டா பிளஸ் வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளும் முடுக்கி விடபட்டுள்ளது. பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2 டோஸ் தடுப்பூசியை முன்கூட்டியே முடித்து 3வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி உள்ள இஸ்ரேல் அரசு அந்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு 4வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளது.
மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் போன்றவர்களுக்கும் 4வது டோஸ் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் தாமதிக்காமல் உடனே அனைவரும் 4வது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு இஸ்ரேல் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.