தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
1969-ம் ஆண்டு சாதாரண பாத்திர கடையாக தொடங்கப்பட்ட சரவணா ஸ்டோர் இன்று தமிழகத்தில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த குழுமத்தினர் சரவணா செல்வரத்தினம், சூப்பர் சரவணா ஸ்டோர் என தனித்தனியாக பிரிந்து தொழில் செய்து வருகின்றனர்.
சென்னையில், தியாகராயநகர், போரூர், பாடி, புரசைவாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நகைக்கடை, துணிக்கடை, ஜவுளிக்கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டும் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், செல்வ ரத்தினம் மற்றும் ராஜரத்தினத்திற்கு சொந்தமான சூப்பர் சரவணா ஸ்டோர், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகர், போரூர், புரசைவாக்கம், குரோம்பேட்டை மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை சோதனை நடைபெறும் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனங்களில் வரிஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து ஐடி அதிகாரிகள் சோதனை நடத்திய சோதனையில் சுமார் 434 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.