ஐ தமிழ் நேயர்களுக்கு அன்பான வணக்கம்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள திருக்கூந்தலூரில் முருகன் கோயில் என்றும், அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படும் பழைமை வாய்ந்த திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முதன்மைக் கடவுளாக சிவன் இருந்த போதிலும் , இங்கு சிவனுக்கு முன்புறம் முருகன் பிரதான மூர்த்தியாக கோயில் கொண்டுள்ளதால், இது முருகன் தலமாகவும் அழைக்கப்படுகிறது.
தினந்தோறும் திரளான பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் வந்து வழிபடும் இத்திருத்தலத்திற்கு, உங்களையும் தரிசிக்க அழைத்துச் செல்வதில்,
ஐ தமிழ்த் தாய் மகிழ்ச்சியடைகிறது.
பண்டைய காலத்தில் நாவல் மர வனத்திடையே சுயம்புவாக தோன்றிய ஈசன் திருத்தலம் என்பதாலும்,
நரிகள் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதாலும், இவ்வாலய இறைவன் அருள்மிகு ஜம்புகாரணேசுவரர்
என்றழைக்கப்படுகிறார். ’ஜம்பு’ என்றால் வட மொழியில் நாவல் மற்றும் நரி எனப்பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயில் தீர்த்தக் குளத்தில் சீதாபிராட்டியார் நீராடியபோது, கூந்தலில் சில முடிகள் உதிர்ந்ததால், இந்த சிற்றூர் “கூந்தலூர்” என்றழைக்கப்படுவதாக புராணம் கூறுகிறது. மேலும், சீதாபிராட்டியார் நீராடிய தீர்த்தம், இன்றும் அவரது திருநாமம் கொண்டு, ‘சீதா தீர்த்தம்’ என்றே வழங்கப்படுகிறது.
நவகிரகங்களுக்கு பதிலாக முருகன் வீற்றிருந்து, நவக்கிரக நாயகனாக அருள்பாலிக்கும் தலம் இது ஒன்றுதான் என்பது இக்கோயிலின் தனி சிறப்பாகும்.
முன்னொரு காலத்தில் பூமியை சமநிலைப்படுத்த, ஈசன் உத்தரவின்பேரில், கயிலாயத்திலிருந்து தென்திசை நோக்கி அகத்தியர் செல்லும்போது,அவருக்கு துணையாக, ரோம மகரிஷியும் சென்றார். அவர்கள் சென்ற நோக்கம் நிறைவேறியவுடன், அகத்தியரை வணங்கிய ரோம மகரிஷி, ” உங்களுடன் வந்ததால் சிவபெருமானின் கயிலாய தரிசனம் காண முடியவில்லை.
இனி நான் கயிலாயம் செல்ல இயலாது. எனவே நான் இருக்கும் இடத்தில் கயிலாய தரிசனம் கிடைக்க நீங்கள் ஆசி தரவேண்டும்” என்று வேண்டினார். அப்போது அகத்தியர், ” உன் உடம்பிலிருந்து ரோமங்கள் உதிர்ந்து, எங்கு தங்கமாக மாறுகிறதோ அந்த இடத்தில் கயிலாய தரிசனம் கிட்டும்” என்று அருள்வாக்கு கூறுகிறார்.
அதன்படி, ரோம மகரிஷி திருக்கூந்தலூர் அரசலாற்றின் தென்கரையில் தவம் செய்து வரும் வேளையில், ஒரு முடி உதிர்ந்து தங்கதானதை கண்டார்.’இங்கேதான் நாம் தேடிய ஈசன் இருக்கிறார்’ என்றெண்ணி நாவல் மரக்காட்டில் ஈசனை தேடி அலைகிறார். அப்போது சிவபெருமான், திருமாலிடம் ரோம மகரிஷியின் “கர்வம், கோபம் இவற்றை அகற்றி, தங்கத்தின் மீது நாட்டம் கொள்ள வை “என்று உத்தரவிடுகிறார். அதன்படி திருமால் நாவிதர் வேடம் பூண்டு ரோம மகரிஷி முன்பு வருகிறார்.
‘ ஊருக்கு புதுசா இருக்கியே.. நீ யார் ?” என்று ரோம மகரிஷி கேட்க, நான் ஒரு சவரத் தொழிலாளி பஞ்சம் பிழைக்க வந்துள்ளேன் சாமி” என்று கூற, ‘ சரி எனக்கு முக சவரம் பண்ணி விடு “என்கிறார் ரிஷி.
அவருக்கு முகச்சவரம் செய்கிறபோது, அவர் முடிகள் கீழே கொட்டி கலகலவென சத்தம் கேட்க, மகரிஷி ‘ என்னடா சத்தம் ?’ என்ற குனிந்து பார்க்க ‘முடியெல்லாம் தங்கமாக மாறி இருக்கவே’,
” ஆ ..தங்கம்..” என்று வாய்விட்டுக் கூறி ஈசனை தரிசிக்கும் ஆவலில்
குளிக்காமலே புறப்பட்டுவிட்டார்.
அவர் குளிக்காமல் தன்னை தரிசனம் செய்ய வருவதை அறிந்த ஈசன், விநாயகர் மற்றும் முருகனை ஏவி, அவரை கோயிலுக்கு வெளியே வழி மறைத்து, அவரது தவறை உணர்த்துமாறு கூறி அனுப்பினார். வெளியில் நின்றபடி ரோம மகரிஷி, ” ஈசனே நெடுநாட்களாய் உன்னை காணும் ஆவலில் அலைந்து, திரிந்தேன்.தவமிருந்தேன். அகத்தியர் அருளியபடி இன்று எனது ரோமங்கள் தங்கமாக மாறியபடியால் , உணர்ச்சி பரவசத்தில் குளிக்காமல் வந்து விட்டேன். தவறை மன்னித்து அருளுங்கள்” என்று உருகினார். அதன்பின் அவருக்கு அங்கேயே கயிலாய தரிசனம் தருகிறார் ஈசன்.
அதன்பின் ரோம மகரிஷி இத்தலத்து ஈசனையே எந்நேரமும் வழிபட்டு, தன்னை நாடி வரும் அடியார்க்கெல்லாம் வறுமை நீங்கி நல்வாழ்வு பெறவும், தமது அஷ்டமா சித்தியால், தாடி வழியே பொன் வரவழைத்து அளித்தும் வந்தார். இறுதியில் இத்தலத்திலேயே முக்தி அடைந்தார். இக்கோயிலில் ஈசான்ய மூலையில் அவருடைய ஜீவ சமாதி உள்ளது. அதன்மீது முருகன் அமர்ந்து நவக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் என்கிறது” தலவரலாறு.
பக்தி பரவசமூட்டும் திருக்கூந்தலூர் தலத்தை தரிசித்த உங்களை, மீண்டும் ஓர் அற்புதமான தலத்தில் சந்திக்கும்வரை, உங்களிடம் இருந்து விடைபெறுவது ஐ தமிழ் !