நகை கடன் தள்ளுபடி சலுகை பெற சரியான விவரங்களை அளித்தால் பின்னர் சரி பார்க்கப்பட்டு ஆய்வின் அடிப்படையில் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார்.
கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்த உடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
அதில் 2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், குடும்ப அட்டையின் படி இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் நகை கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்ற குடும்பத்தினருக்கு தள்ளுபடி செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொது நகை கடன்களை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டு, கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யவும் நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது.
மேலும் 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள் , ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுப்படி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது இந்த நெறிமுறைகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியாக வழங்காதவர்கள் அதனை சரியாக அளித்தால் பின்னர் சரி பார்க்கப்பட்டு ஆய்வின் அடிப்படையில், நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.