நாங்குநேரியில் சகமாணவர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னதுரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் .
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது தங்கையை , சக வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த விவகாரம் தொடர்பாக 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த மாணவன் மற்றும் அவரது சகோதரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாணவர் சின்னதுரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் .
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் கூறியதாவது :
நாங்குநேரியில் சாதி ஆதிக்க எண்ணம் கொண்ட சக மாணவர்களால் தாக்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னதுரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினோம்.
அண்ணன் சின்னதுரை உயிரை காத்த தங்கை சந்திரா செல்விக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என தனது ட்விட்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.