கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் கண்ணாட்டுவிளை பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 14ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவன் மதிய உணவு சாப்பிட்ட பிறகு சிறுநீர் கழிப்பதற்காக கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பள்ளி இயற்பியல் ஆசிரியர் அருள் ஜீவன் மாணவனை ஆய்வகத்திற்கு வரும்படி அழைத்துச் சென்று அந்த மாணவனிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதையடுத்து பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தை மாணவன் தனது தந்தையிடம் சென்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் தந்தை கடந்த 20ஆம் தேதி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சங்கீதா அன்பு ஜூலியட் மற்றும் உதவி ஆய்வாளர் பிரேமா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவனிடமும், மாணவன் பயின்று வந்த அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின் போது, ஆசிரியர் அருள் ஜீவன் மாணவனிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதை அடுத்து இயற்பியல் ஆசிரியர் அருள் ஜீவன் மீது போக்சோ சட்டப்பிரிவு 7, 8, 9F மற்றும் மற்றும் 10 ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆசிரியர் அருள் ஜீவனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.