காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக சக மாணவியின் தாயார் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து சிறுவன் உயிரிழந்த நிலையில் நீதி கேட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மௌன பேரணி நடைபெற்றது. இவை காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகண்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக கடந்த 3ம் தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டான்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து சக மாணவியின் தாய் சகாய ராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக சிறுவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது, காவல்துறையும், மருத்துவர்களும் அலட்சியம் காட்டியதால் தான் மாணவன் உயிரிழந்தான்.
எனவே காவல்துறை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். மாணவனின் பெற்றோரும் அரசு மருத்துவமனை மற்றும் காவல்துறை மீது குற்றஞ்சாட்டினர்.சிறுவன் பாலமணிகண்டன் சிகிச்சை விஷயத்தில் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் போராளிகள் குழுவினர் காரைக்காலில் முழு கடை அடைப்பு போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதனை அடுத்து மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவன் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மௌன பேரணி நடைபெற்றது.
இதில் உயிரிழந்த மாணவனின் பெற்றோர் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட கலந்து கொண்டனர். இதனையடுத்து இறந்த பால மணிகண்டனுக்கு உரிய நியாயம் கிடைக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்திய மருத்துவ குழு மூலம் ஆய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிம் பேசிய உயிரிழந்த சிறுவனின் பெற்றோர்: சிபிஐ விசாரணை நடந்தால் மட்டுமே தனது மகன் இறப்பு நியாயம் கிடைக்கும் எனவும், புதுச்சேரி அரசு நியமித்த மருத்துவர் குழு அறிக்கை தவறானது எனவும், சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தங்களிடம் எந்த தகவலும் பெறாமலே அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டினார்.