ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், 4-வது நாளாக இன்றும் ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை வழங்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவு 9,136 கன அடியிலிருந்து 13, 473 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதே போன்று கபினி அணையில் இருந்தும் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருவதனால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தமாக காவிரி ஆற்றில் 18, 473 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால், கடந்த வியாழக்கிழமை அன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 11,000 கன அடியாகவும் அதனைத் தொடா்ந்து மாலை நிலவரப்படி விநாடிக்கு 13,500 கன அடியாகவும் அதிகரித்தது.
தொடர்ந்து நேற்று காலை மேலும் அதிகரித்து 14 ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்நிலையில், இன்று (19.08.23) மீண்டும் நீர்வரத்து அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொடர்ந்து 4வது நாளாக இன்றும் அங்கு பரிசல் இயக்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.