தன் மீது தாக்குதல் நடத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சதி செய்துள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆரிஃப் கான்(arif-khan) குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தை போல் அரசியல் கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது.இந்த நிலையில் நேற்றிரவு ஆளுநர் ஆரிஃப் கான் விமான நிலையம் செல்வதற்காக கவர்னர் மாளிகையிலிருந்து காரில் புறப்பட்டார்.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆளுநர் ஆரிஃப் கான்னுக்கு கருப்புக் கொடி காண்பித்து வாகனத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்எஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதனை பார்த்த ஆளுநர் ஆரிஃப் கான் காரிலிருந்து இறங்கி கருப்புக்கொடி காண்பித்தவர்களை தன்னிடம் வருமாறு அழைத்தார். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனடியாக காவல் துறையினர் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆரிஃப் கான் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், கேரளாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. இங்கு குண்டர்களின் ஆட்சி நடக்கிறது. என்னைத் தாக்குவதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதற்கு முதல்வர் பினராயி விஜயன் உடந்தையாக இருக்கிறார். அவருக்குத் தெரியாமல் இதெல்லாம் நடக்காது. முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக இதேபோல போராட்டம் நடத்த முடியுமா? இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று குற்றம்சாட்டினார்.