கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் காட்டாற்று வெள்ளம் காரணமாக 40 குடும்பங்கள் ரிஸ்க் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக விவசாயிகளும் விவசாய பொருட்களை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்து வரும் சூழலில் கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியிலுள்ள மூங்கில் காடு பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு கிராம மக்கள், விழுந்து கிடக்கும் மரத்தின்மீது ஏறியும், ஆற்றில் இறங்கியும், ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெண்கள்,முதியவர்கள் பலரும் ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அவசர தேவைக்கு கூட வெளியில் சென்று வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.