கரைபடிந்த அத்தியாகத்தை ஜெயலலிதாவின் அலட்சிய நிர்வாகத்தின் காரணமாக ஏற்பட்ட பேரிழப்பை செய்த அ.தி.மு.க.வுக்கு தற்போது தி.மு.க. தலைமையிலான ஆட்சியை விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்ததால் சென்னை மாநகரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைநீர் பெருக்கெடுத்து சாலைகளில் தேங்கிய காரணத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் கடும் சிரமத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால், சென்னையை பொறுத்தவரை 14 அமைச்சர்கள் களத்தில் நின்று பணியாற்றியதோடு, மாநகராட்சி அதிகாரிகளின் துணை கொண்டு உடனடியாக வெள்ள நீரை வெளியேற்றுகிற பணியில் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். மழை நின்ற 24 மணி நேரத்தில் சென்னை மாநகரின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டிருக்கிறது. மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குகிற பணியை தீவிரமாக செய்திருக்கிறார்கள். இதன்மூலம் வெள்ளத்தின் பாதிப்பு கணிசமான அளவு தவிர்க்கப்பட்டிருக்கிறது.
2023 ஆம் ஆண்டு மழையோடு 2015 ஆம் ஆண்டில் பெய்த மழையை ஒப்பிட்டு பார்த்தால் இன்றைய நிலைமையை தமிழக அரசு மிகுந்த விழிப்புணர்வோடு எதிர்கொண்டிருப்பதை உணர முடியும். 2015-ல் பெய்த மழையின் அளவு நுங்கம்பாக்கத்தில் 29.4 செ.மீ., மீனம்பாக்கத்தில் 34.5 செ.மீ. தான். ஆனால், தற்போது அதே மீனம்பாக்கத்தில் 43 செ.மீ., பெருங்குடியில் 44 செ.மீ. ஆகவும் 24 மணி நேரத்தில் பெய்திருக்கிறது. 2015 இல் செம்பரம்பாக்கம் ஏரியில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் சேர்ந்த பிறகும் தண்ணீர் திறப்பதில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அலட்சிய போக்கு காரணமாக ஏற்பட்ட தாமதத்தினால் டிசம்பர் 2 ஆம் தேதி இரவு நேரத்தில் 29,000 கனஅடி நீர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திறந்து விடப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக 70,000 கனஅடி நீரும் அடையாறுக்கு வர நேர்ந்ததால் மொத்தத்தில் 1 லட்சம் கனஅடி நீர் சேர்ந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது. அதேநேரத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி 900 கனஅடி நீர் தான் திறந்து விடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட இத்தகைய செயற்கை வெள்ளத்தின் காரணமாக 190 பேர் உயிரிழக்கிற அவலநிலை ஏற்பட்டது. பலரது சொத்துகள் நாசமாக்கப்பட்டன.
இத்தகைய கரைபடிந்த அத்தியாகத்தை ஜெயலலிதாவின் அலட்சிய நிர்வாகத்தின் காரணமாக ஏற்பட்ட பேரிழப்பை செய்த அ.தி.மு.க.வுக்கு தற்போது தி.மு.க. தலைமையிலான ஆட்சியை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை. ஆனால், தற்போது இவ்வளவு கடுமையான மழை பெய்தாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 8 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது.
மேலும், ரூபாய் 4 ஆயிரம் கோடி செலவில் வெள்ள நீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டதினால் தான் மழை பெய்த 24 மணி நேரத்தில் சென்னை மாநகரின் பெரும்பாலான தெருக்களில் தண்ணீர் வடிந்து இயல்பு நிலையில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சென்னை கடற்பரப்பில் 18 மணி நேரம் புயல் மையம் கொண்டிருந்ததால் ஆற்று நீரை கடலில் உள்வாங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் தான் தொடர்ந்து கனமழை பெய்து சென்னை மாநகரம் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தீவிர கண்காணிப்பின் காரணமாக முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் மக்களை மீட்கும் பணியிலும், நிவாரண உதவிகளும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்ட கே.என். நேரு உள்ளிட்ட 14 அமைச்சர்களை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.
தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளின்படி கட்சி எல்லைகளைக் கடந்து மக்களின் ஆதரவோடு இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதில் எவர்மீதும் பழி போடுகிற படலத்தினால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. மக்கள் களநிலவரத்தை நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால் இத்தகைய விமர்சனங்கள் உண்மை நிலையை புரிந்து கொண்ட மக்களிடம் எடுபடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.