ஒருவர் தனக்கான இணையை தேர்ந்தெடுப்பது அவரது உரிமை. அவர் தேர்ந்தெடுத்த இணையை அங்கீகரிக்க வேண்டும், தன்பாலினத்தவர்கள் எந்த வகையிலும் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது என்பதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிபடுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய வழக்குகளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கி உள்ளது.
உலகெங்கும் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். பல நாடுகளில் அவர்களுக்கான உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் அவர்கள் போராடியே பெற வேண்டிய நிலை உள்ளது.
தன்பாலின திருமணங்கள்:
இந்தியாவில் கடந்த 2018 முதல் தன்பால் ஈர்ப்பு சட்டப்படி குற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குழந்தைகளைத் தத்தெடுப்பது, தன்பாலின திருமணங்களை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட சில பிரச்சினைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் பல்வேறு முக்கிய வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில்,தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு 4 வெவ்வேறு தீர்ப்புகளை இன்று வழங்கியுள்ளன.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்:
பிற குடிமக்களைப் போலவே தன்பாலின ஜோடிகளுக்கும் சமூகத்தில் மற்றவர்களைப் போல சமமாக வாழ அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமை என்பது உள்ளது.
அதன்படி அவர்கள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகள் மற்றும் தன்பாலின ஜோடிகள் இணைந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியும் அவர்களுக்கான இந்த உரிமையை மறுக்க முடியாது என்று தெரிவித்த அவர்,
தன் பாலின ஜோடிகளுக்கான ரேஷன் அட்டை வழங்குவது உள்ளிட்ட அரசின் சலுகைகளை வழங்குவது குறித்து அமைச்சரவை செயலாளர் தலைமையிலான குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு திருநங்கையின் திருமணம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவரால் ஒரு பாலின உறவில் இருக்க முடியும் என்பதால் அத்தகைய திருமணங்கள் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படலாம்.
மேலும் தன்பாலின நபர்களிடம் பாகுபாடு காட்ட முடியாது என்பதை இந்த நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது, மாற்றுப்பாலின தம்பதிகளுக்கு வழங்கப்படும் பொருள், நன்மைகள் மற்றும் சேவைகள், ‘QUEER’ ஜோடிகளுக்கு மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து திருமணம் ஒரு நிலையான மற்றும் என்றும் மாறாத அமைப்பு என கூறுவது சரியல்ல, திருமணத்தில் சீர்திருத்தங்கள் சட்டங்களால் கொண்டு வரப்பட்டுள்ளன.சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு கொண்டுச் செல்லும்.
தன்பாலின ஈர்ப்பு என்பது நகர்ப்புற மேல் தட்டுச் சமூகத்தைச் சார்ந்தது மட்டுமல்ல,பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொறுப்பு அரசியல் சட்டப்படி நீதிமன்றங்களுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்து தீர்ப்பை வாசித்து வருகிறார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் :
வழக்கமான திருமண முறை மற்றும் தன் பாலின திருமண முறை ஆகியவற்றை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக பார்க்க வேண்டும் .
மேலும் பல ஆண்டுகளாக தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்ய இதுவே சரியான தருணம், எனவே தன்பாலி திருமணத்துக்கும், இணைவதற்கும் உரிய உரிமையை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் மாறுபட்ட தீர்ப்பு:
தற்போதுள்ள சட்டங்களின்படி, திருநங்கைகள் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை ஏற்றுக்கொள்கிறோம்; ‘Queer’ தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமையில், தலைமை நீதிபதி சந்திரசூட்டுடன் நாங்கள் உடன்படவில்லை மற்றும் சில முரண்பட்ட கருத்துகளை நாங்கள் முன்வைக்கிறோம்.
Queer ஜோடிகளுக்கு PF, ESI, ஓய்வூதியம் போன்ற திட்டங்களின் பலன்களை மறுப்பது, பாரபட்சமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார்.