கோவையில் நடிகர் விஜய்யின் லியோ பட டிக்கெட் முன்பதிவில் நடக்கும் நூதன மோசடியால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் கோவை கே.ஜி சினிமாஸ் திரையரங்கில் பால்கனி டிக்கெட் விலை 200 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், 200 ரூபாய் டிக்கெட் உடன் டீ, காபி, தின்பண்டங்கள், குளிர்பானங்கள் என அனைத்தையும் சேர்த்து காம்போ பேக் என்று 450 ரூபாயாக விலை நிர்ணயம் செய்துள்ளனர். மேலும் தற்பொழுது தொடர்ந்து 4 நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக அரசு திரையரங்குகளில் டிக்கெட் கட்டணங்களை அதிகப்படுத்தக் கூடாது. மேலும், சரியான பார்க்கிங் வசதி மற்றும் திரையரங்குகளில் சுகாதாரமான சூழ்நிலை போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல், கோவை மாவட்ட ஆட்சியர் இது குறித்த சுற்றறிக்கையை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் அனுப்பி வைத்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது கோவையில் காம்போ பேக் என்று ஒன்றைக் கொண்டு வந்துள்ள பிரபல திரையரங்கமான கேஜி திரையரங்கம் ஒரு டிக்கெட்டின் விலையை 450 ரூபாயாக உயர்த்தி விற்பனை செய்து வருவது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த டிக்கெட் விலை உயர்விற்கு சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.