நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடங்கிய நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த, தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், அதற்கான வாக்குப்பதிவு முழு பாதுகாப்புடன் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. இதனை அடுத்து காலை 7 மணியில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
ஒரு வாக்குச் சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை செலுத்தினார் . நீலாங்கரை வாக்குச்சாவடி வாக்கு செலுத்த சிவப்பு நிற காரில் வந்த விஜய், வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.