lord Murugan tattoo Controversy : இளம்பெண் ஒருவர் முருகனின் திருவுருவப்படத்தை தனது மார்பில் டாட்டூ வரைந்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்க் கடவுளான முருகனுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தமிழர்களின் ஒப்பற்ற தெய்வமான முருகனை வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வணங்கியதற்கு சமம் என்று ஆன்மீகம் சொல்கிறது.
அதுமட்டுமல்லாமல், முருக கடவுள் மீதான அன்பை பக்தர்கள் ஒவ்வொரு வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒரு சிலர் முருகப்பெருமானுக்கு உரிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபடுகின்றனர். முருகப் பெருமானின் கோயிலுக்கு சென்று காவடி எடுத்து அவரை வணங்கி வருகின்றனர்.
ஆனால், இன்னும் ஒரு சிலர் தங்களுடைய அதீத பக்தியை வெளிப்படுத்தும் விதமாக முருகன், வேல் ஆகியவற்றை தங்கள் உடலில் பச்சைக்குத்தி கொள்கின்றனர். அதுபோல தான் தற்போது இளம்பெண் ஒருவர் முருகனின் திருவுருவப்படத்தை தனது மார்பில் டாட்டூவாக வரைந்துள்ளார்.
இதையும் படிங்க : ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்து? அபிஷேக் பச்சன் ஷாக் பதில்!!
இதுதொடர்பான வீடியோவை அந்த பெண் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட, அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடவுளின் உருவப்படத்தை எப்படி மார்பகத்தில் வரையலாம் என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இன்னும் சிலரோ கடவுளால் படைக்கப்பட்ட இந்த உடலில் கடவுளின் திருவுருவப் படத்தை வரைய எந்த தடையும் இல்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு ஆண் தனது உடலில் கடவுளின் திருவுருவப்படத்தை வரைந்தால் அவரை யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் ஒரு பெண் அவ்வாறு செய்தால் கடும் வார்த்தைகளை அள்ளி வீசுகிறது இந்த ஆணாதிக்க சமூகம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், “ஒரு பெண் தனது மார்பில் முருகர் படம் வரைஞ்சா அதை அசிங்கம், கலாச்சார சீரழிவுன்னு கத்துவோம். ஒரு ஆண் தனது நெஞ்சில் கடவுளின் படம் வரைந்து வீடியோ போட்டால் அதற்கு எந்த எதிர்ப்பு வருவது இல்லை.
இவர்களை பொறுத்தவரை பெண் மார்பு என்பது அசிங்கமான பகுதி, அங்கு கடவுள் படம் வரைந்தால் கடவுள் கோபப்படுவார். மார்பை காட்டும் அந்த பெண்ணுக்கு பிரச்சனை இல்லை. உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆனால், இன்னும் ஒரு சிலரோ ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி கடவுளை எப்படி வணங்க வேண்டுமோ அப்படி தான் வணங்க வேண்டும். உடலின் கண்ட இடத்தில் கடவுளின் படத்தை பச்சை குத்தி அசிங்கப்படுத்தக் கூடாது என்று பதிவிட்டு வருகின்றனர்.