பிரபல கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான காமகோடியன் இன்று காலமானார்.
தமிழ் திரையுலகில் மூத்த கவிஞர்களில் ஒருவரான காமகோடியனின் இயற்பெயர் சீனிவாசன். தமிழ் திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய இவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி காலம் வரையில் அவருடனேயே பணியாற்றி வந்தார்.
1980களில் இவர் எழுதிய பல பாடல்கள் ஹிட்டாகின. பாடல் எழுதுவது மட்டுமின்றி பல மொழி மாற்றுத் திரைப்படங்களையும் கவிஞர் காமகோடியன் எழுதியிருக்கிறார்.
2002 ல் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தில், இவர் எழுதிய ‘௭ன் அன்பே ௭ன் அன்பே என் நெஞ்சுக்குள் கவிதாஞ்சலி’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இவர் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா, தேவா, எஸ்.ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கவிஞர் காமகோடியன் காலமானார். இவரது இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.