ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2ம் தேதி அன்று இரவு பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது . இந்த பயங்கர விபத்தில் ரயில்களில் பயணித்த ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை வெளிவந்துள்ள அதிகாரபூர்வ தகவலின்படி, இந்த பயங்கர விபத்தில் 275 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து முதன் முதலில் மீட்பு படைக்கு தகவல் தெரிவித்தவர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர் வெங்கடேசன் என்பது தெரியவந்துள்ளது.

வெங்கடேசன் தனது வாட்ஸ் அப் மூலம் விபத்து நடந்த படங்கள் இருப்பிடத்தை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிய நிலையில், மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதன் மூலம் பல உயிர்கள் விரைந்து காப்பாற்றப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்த NDRF வீரர் வெங்கடேசனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய NDRF வீரர் வெங்கடேசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து தமிழக முதல்வர் ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது : #OdishaTrainAccident-இல் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன் அவர்கள் உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன். என தெரிவித்துள்ளார் .