தமிழ் சினிமாவில் சமூக நீதி பேசும் துடிப்பான இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ் . தற்போது வரை வெறும் மூன்று படங்கள் மட்டுமே இயக்கியுள்ள இவர் தனது எழுத்தாலும் படத்தின் சில உருக்கமான காட்சிகளாலும் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துவிட்டார் .
அந்தவகையில் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படம் மாமன்னன். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நவரச நாயகி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வைகை புயல் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
உதயநிதியின் காதல் மனைவியான கிருத்திகா உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படம் கடந்த மாதம் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை அன்று திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.
விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்க்கிடையே வெளியான இப்படம் முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது .
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்துள்ள மாமன்னன் திரைப்படம் வெளியாகி 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது.
உதயநிதியின் திரைப்பயணத்தில் இதுவரை கண்டிராத வசூல் சாதனையை படைத்துள்ள இப்படம் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக மேலும் பல வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.