நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012ஆம் ஆண்டே வாபஸ் பெற்ற நிலையில், சீமானுக்கு எதிரான வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கடந்த 2011ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை திரும்பப் பெற்று கொள்வதாக கூறி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளார்.
மேலும் கடந்த 2011ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்கு பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரி இருந்தார்.
தற்பொழுது இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2011ல் அளித்த புகாரை 2012ல் விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில், 2023ல் புதிதாக புகார் அளித்து, அதுவும் ஒரு மாதத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த வழக்கு தொடர்பான மனு நகல் தங்களுக்கு தரப்படவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 2011ல் அளித்த புகாரை வாபஸ் பெறப்பட்ட நிலையில் வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி இது குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்த மனு நகலை காவல் துறைக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 2011 மற்றும் 2023ல் விஜயலட்சுமி அளித்த புகார்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட விவரங்களை காவல்துறை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.