மதுரை மாவட்டத்தில் 5-ஆம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறவுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 5-ஆம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறவுள்ளதாகவும் இந்த முகாமில், 1 இலட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்திருந்தார்.
அதன் படி நாளை மதுரை மாநகரில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரை மாநகரின் நாளை நடைபெறும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு சைக்கிள், மிக்ஸி, குக்கர் மற்றும் சில்வர் பாத்திரங்களை வழங்குவதாக மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதேபோல பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னோட்டமாக இந்தப் பரிசுப் பொருட்கள் ஆட்சியரகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.