மதுரையில், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு தமிழில் 100க்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்ட (mark mistake) சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் அருகேயுள்ள சூரக்குளத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற மாணவி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த நிலையில், இவருடைய ப்ளஸ்2 மதிப்பெண்கள் (mark mistake) ஆன்லைனில் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, தமிழில் 100 க்கு 138 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைனில் வெளியான மாணவியின் மதிப்பெண் பட்டியலில், 4 பாடங்களில் தேர்ச்சிக்கான மதிப்பெண்கள் பெற்றபோதும் அவர் தேர்ச்சி அடையவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவி ஆர்த்தி தமிழில் 100 க்கு 138 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 100க்கு 92 மதிப்பெண்களும், கணிதத்தில் 100க்கு 56, மதிப்பெண்களும், இயற்பியல் துறையில் 100க்கு 75 மதிப்பெண்களும், வேதியல் துறையில் 100க்கு 71 மதிப்பெண்களும் உயர்கணிதத்தில் 100க்கு 82 மதிப்பெண்களும் பெற்றதாக முடிவுகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மொத்தமாக 600 க்கு 514 மதிப்பெண் எடுத்தும் நான்கு பாடங்களில் ஃபெயில் என முடிவுகள் வந்துள்ளதை அடுத்து மாணவி ஆர்த்தி குழப்பமடைந்துள்ளார்.
இதையடுத்து, அவர் பயின்ற பள்ளிக்குச் சென்று கேட்டபோது இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும் இதனால், மாணவி உயர் கல்வி படிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், 600 க்கு 514 மதிப்பெண் எடுத்து நான்கு பாடத்தில் தோல்வி என்று வந்துள்ளதால் மிகவும் மன வேதனையில் இருப்பதாகவும் மாணவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.