சென்னை மாநகராட்சியில் பெண்களுக்காகவே முதன்முறையாக நடமாடும் ஒப்பனை அலங்கார அறை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டம், பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த திட்டத்தினை நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் சென்னை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.
இன்றைய சூழலில் பெண்கள் தங்களுடைய பணிக்காக சொந்த ஊரிலிருந்து பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லும் நிலையில், பொது இடங்களில் கழிவறைகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மேலும், பயணங்களின் போது ஆங்காங்கே கழிவறைகள், ஒப்பனை அறைகள் இருந்தாலும் பெரும்பாலும் அவை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவே பெண்கள் கருதுகின்றனர்.
எனவே தான் அவசர பணிக்காக வெளியில் செல்லும் பெண்களுக்காகவே சென்னையில் முதன் முதலாக நடமாடும் ஒப்பனை அறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்த ஒப்பனை அறை வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் ஒப்பனை அறையில் ஒரு கழிவறை, சானிடரி நாப்கின், உடை மாற்றும் சிறிய அறை, தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதற்காக தனி அறை ஆகியவை அடங்கியுள்ளது. தற்போது சென்னையில் ஒரு மண்டலத்திற்கு 1 என்ற கணக்கில் மொத்தம் 15 நடமாடும் ஒப்பனை அறைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சுமார் 4.37 கோடி செலவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த திட்டம் குறித்து தெரிவித்த சென்னை மேயர் பிரியா,
“இந்த திட்டம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் இந்த வாகனம் நிறுத்தப்படும். இதனை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுவாக சினிமா, டிவி சீரியல் சூட்டிங் நடைபெறும் இடங்களில் மட்டும் தான் இதுபோன்ற கேரவன்கள் நிறுத்தப்பட்டிருக்கும். தற்போது, பெண்களுக்காக சென்னை மாநகரத்தின் முக்கிய வீதிகளில் நடமாடும் ஒப்பனை அறை கேரவங்கள் உலா வருகிறது.