lok sabha election alliance : நாளை அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது மக்கள் நீதி மய்யம்..
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இடம் உள்ளதா? எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்? என்ற குழப்பம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், இதுதொடர்பாக அவசர ஆலோசனை கூட்டத்தை மக்கள் நீதி மய்யம் நாளை நடத்துகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் (lok sabha election alliance) தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
மற்றொரு பக்கம் பாஜகவும் வலுவான கூட்டணியை அமைக்க முயன்று வருகிறது.
புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியை உறுதி செய்துள்ளன.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேமுதிக மற்றும் பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. எதிர் வரும் நாட்களில் இந்தக் கூட்டணி அறிவிக்கப்படும் எனத் எதிப்பார்க்கப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதுவரை 4 கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 சீட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 சீட் என்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தையில் இழுபறியாக உள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை ஆளுக்கொரு சீட் கேட்டு வரும் நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட ஆர்வமாக உள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட கமல்ஹாசன், இந்த முறை திமுக கூட்டணியில் இணைய முடிவு செய்துள்ளார்.
ஆனால்,மக்கள் நீதி மய்யத்தை திமுக தரப்பு இன்னும் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றும், மறைமுகமாக சீட் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மநீம கட்சிக்கு 1 சீட் தர திமுக தயாராக உள்ளதாகவும், ஆனால் குறைந்தபட்சம் 2 சீட் வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மறுபுறம் உதயசூரியன் சின்னத்தில் நின்றால் மட்டுமே 2 சீட் தர முடியும் என்று, இல்லையெனில் 1 சீட் தான் கொடுக்க முடியும் என்பதில் திமுக தரப்பு உறுதியாக இருப்பதாககூறப்படுகிறது.
இந்நிலையில், நாளை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவுறுத்தியுள்ளார்.
திமுகவுடனான தொகுதி பங்கீட்டு இழுபறி நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, முடிவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.