மாமதுரை விழா துவக்க நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் “தவறு செய்தவர் மன்னனே என்றாலும் கேள்வி கேட்ட மண் மதுரை” என புகழ்ந்து பேசினார்.
மதுரையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 4 நாட்கள் மாமதுரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது..
“மன்னரையே கண்ணகி கேள்வி கேட்ட இடம் மதுரை. தவறு செய்தவர் மன்னனே என்றாலும் கேள்வி கேட்ட மண் தான் மதுரை.
சென்னைக்கு அடுத்து 2வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது மதுரை. மாபெரும் பன்னாட்டு விழாவாக சித்திரை திருவிழா நடக்கிறது.
பழமை மாறாமல் ஊரை பாதுகாப்பது அவசியம். அதே நேரத்தில் நவீன வசதிகளை தர வேண்டும். பண்பாட்டு விழாவை அனைவரும் கொண்டாட வேண்டும்.
காலம் தோறும் மதுரை மாநகரம் மாறிய காட்சிகள், மதுரை தமுக்கம் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மாமதுரை விழாவை கொண்டாட வேண்டும்.
பழமைக்கு பழமையாய், புதுமைக்கு புதுமையாய் இளைஞர்கள் ஊரை போற்றி பாதுகாக்க வேண்டும்” என பேசினார்.