சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளைய தினம் மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறவுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. நேற்று முன் தினம் காலை ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலிலிருந்து தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் புறப்பட்டது.
ஓமலூர், முருங்கமங்கலம், பெருநாடு சாஸ்தா கோயில் வழியாக தென்காசி, செங்கோட்டை, அச்சன்கோவில், பத்தனம்திட்டா வழியாக ரதத்தில் வரும் தங்க அங்கி, இன்று பம்பை வந்தடைந்து, அங்கிருந்து சன்னிதானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தப்பட்டு இன்று மகா தீபாராதனை நடத்தப்படுகிறது.
நாளைய தினம் மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். 11 மணிக்கு களபாபிஷேகம் முடிந்ததும் தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் தங்கி அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல சிறப்பு பூஜை நடைபெறும்.
அன்று இரவு 10:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு மண்டலக்காலம் நிறைவு பெறும். மீண்டும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த்,
மண்டல பூஜையையொட்டி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி 26-ந் தேதி மதியம் பம்பை வந்து சேரும்.
தொடர்ந்து ஓய்வுக்கு பிறகு தங்க அங்கி மாலை 5.15 மணிக்கு சரம் குத்தி வந்தடையும். அங்கு தங்க அங்கி ஊர்வலத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று கூறினார்.