ஜம்மு காஷ்மீரில் ரேசாய் மாவட்டத்தில் வைஷ்ணவி மாதா கோயிலில் இன்று ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ரேசாய் மாவட்டத்தில் உள்ள கத்ரா நகரில் திரிகுதா மலைப்பகுதியில் 5,200 அடி உயரத்தில் உள்ள வைஷ்ணவி மாதா கோயில் புகழ்பெற்றது. குகையில் அமைந்துள்ள வைஷ்ணவி மாதா கோயிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள்.
புத்தாண்டு தினத்தன்று இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும், நிர்வாகிகளும் திணறினர்.
இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 12பேர் உயிரிழந்த நிலையில் 26க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து போலீஸார், தீயணைப்புப் படையினர், மற்றும் கோயில் ஊழியர்கள் இணைந்து மீட்புப்பணியல் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, வைஷ்ணவி தேவி சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ள நிலையில், இன்னும் உயிரிழந்தது யார் என்பது உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்தது வருத்தமளிக்கிறது. பக்தர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000 வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ஜம்மு- காஷ்மீர் மாநில ஆளுநர் மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வைஷ்ணவி தேவி கோயில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், கோயிலில் வரிசையில் நின்ற பக்தர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.