தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஒன்றின் விலை இன்று முதல் 2 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தீப்பெட்டி ஒன்றின் விற்பனை விலையானது கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மாற்றம் இன்றி ஒரு ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் மூலப் பொருட்களின் விலை, மின்சார கட்டணம் ,லாரி வாடகை உள்ளிட்டவை உயர்ந்துள்ளதால் தீப்பெட்டியின் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்தது.
இதனை அடுத்து அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் டிசம்பர் 1-முதல் 50 குச்சுகள் கொண்ட தீப்பெட்டியை 2 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நடை முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.