குடியரசுத் தலைவர் வருகை மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் குடியரசுத்தலைவருக்கான பாதுகாப்பு குழுவினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சிவராத்திரி தினமான வரும் 18ஆம் தேதி அன்று காலை 12 மணி முதல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்யவுள்ளார். தொடர்ச்சியாகக் கோவிலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வருகைதரவுள்ள நிலையில் கோவிலைச் சுற்றி இன்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி 8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள தங்கு விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகிறது. இதேபோன்று ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று பாதுகாப்பு கருதி மதுரை மாவட்டம் முழுவதும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனாட்சியம்மன் கோவிலில் குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்துவருகின்றனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுவருகிறது.

இதில் குடியரசுத் தலைவரின் வருகை, சாமி தரிசனத்திற்கான ஏற்பாடுகள், அன்னதானத்தில் பங்கேற்று குடியரசுத் தலைவர் உணவு அருந்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.
இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை, காவல்துறை, உளவுத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை ,அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.