அக்டோபர் 11 – பெண் குழந்தைகள் தினம்
பெண்கள் பொது சமூகத்தில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நாம் நன்கு அறிந்திருக்கின்றோம். பெண் சமூகத்தை வலிமைப்படுத்துவதன் மூலம் இந்த தேசத்தை வலிமைப்படுத்த முடியும் என்ற ஆழமான நம்பிக்கை நமக்கு உண்டு.
உடுத்தும் உடை, நாகரீகம் இவையெல்லாம் மேற்கத்திய கலாச்சாரங்களுக்கு ஏற்ற வகையில் மாறுபடுவதால் மட்டும் பெண் சமூகத்தை முன்னேற்றிவிட முடியாது. கண்ணியம், தொலைநோக்கு பார்வை, எடுத்த இலக்கை நோக்கி சரியாக பயணித்தல் போன்றவையே பெண் சமூகம் முன்னேறுவதற்கான விதையாய் அமையும்.
ஆணுக்கு இணையாய் சம உரிமை என்பது ஆணின் வலிமைக்கு ஏற்றார்போல் மல்லுக்கட்டுவதென்பதல்ல. மாறாக ஆணால் சாதிப்பதை தன்னாலும் சாதிக்க இயலும் என்ற மனவலிமையை ஏற்படுத்தி முன்னேறுவதாகும்.
பெண்ணியவாதிகள் கூறிக்கொள்ளும் சிலர், ஆணுக்கு இணையாய் இருக்க வேண்டும் என்று கூறி, ஆண் செய்யும் அனைத்து தவறான பழக்கங்களையும்( போதைப்பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் பல) செய்து ஆணுக்கு சமம் என்று ஆணவம் கொள்வதோடு, சமகாலத்தில் பல பெண்களை வழிதவறி அழைத்து செல்வதையும் பார்க்கமுடிகிறது.
இந்த நிலையில், தேசிய குற்ற ஆவண காப்பகம் 2019-ஆம் ஆண்டு தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2018-ல் 3.78 லட்சமாக இருந்ததாகவும், அதுவே 2019-ல் 4.05 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 7.3 சதவீத ஏற்றமாகும். இதில் 30.9 சதவீத குற்றங்கள் கணவர்களால் அல்லது உறவினர்களால் பெண்களுக்கு நிகழ்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 7.9 சதவீதம் எனவும், ஒட்டுமொத்தமாக பெண்களின் மக்கள்தொகை எண்ணிக்கையில் குற்றங்கள் கடந்த 2018ஆம் ஆண்டு 58.8 சதவீதம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் அதுவே 2019-ல் 62.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.குறிப்பாக, 2019-ஆம் ஆண்டு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 88 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் உறவினர்கள் மூலம், 30 சதவீதத்திற்கும் அதிகமான குற்றங்களால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற செய்தி மிகவும் கவனிக்கத்தக்கது.
சமூகத்தில் பெரும் பங்கு வகிக்கும், நாட்டின் பல துறைகளில் சாதிக்கத்துடிக்கும் பெண்களின் சவால்கள் குடும்பத்திலிருந்தே தொடங்குகிறது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, சரியான வழிகாடுதல் இல்லாத குடும்பம் என்று கூறலாம்.
’நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்ற பழமொழியை போல ஒரு சரியான குடும்பம் மட்டுமே குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தையும், சிறந்த கல்வியையும் அளிக்கிறது என்பதை மறுக்க முடியாது.இதில் ஆண் குழந்தைகள் ஒன்றும் விதிவிலக்கல்ல.
ஆண், பெண் குறித்தான பாலின வேறுபாட்டை முதலில் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு, சரியான போதனைகளை குடும்பத்தின் மூலமே பெற முடியும். அதோடு, குழந்தைகள் வளரும் பருவத்தில் அக்குழந்தைகளின் நட்பு வட்டம் எப்படி இருக்கிறது என்பதையும் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆண்-பெண் சம உரிமை என்பது என்னவென்பதை கல்வியின் மூலமும், சமூக முன்னேற்றத்தின் மூலமும் உணர்த்தினால் மட்டுமே இதற்கான புரிதலை அறிய முடியும். கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் உள்ளிட்ட விஷயங்களில் ஆணுக்கு இணையான சம உரிமை வழங்குதல் மட்டும்தான் ஒரு முன்னேற்றமடைந்த சமூகமாக நம்மை மாற்ற முடியும்.வெறுமென, ஒரு ஆண்-பெண் சம உரிமை என்ற பெயரில், ஆணுக்கு இணையாக எல்லாவற்றையும் செய்யவேண்டும் என நினைத்து தவறான பாதையில் செல்வதென்பது, உடைந்துபோன கப்பலில் பயணம் செய்வதற்கு சமமாகும்.
ஆக.. சமூக பங்கெடுப்பில் ஆண்-பெண் இருபாலருக்கும் சம உரிமையுண்டு. அதனை சரியான வழித்தடங்கள் அமைத்து முன்னேற்றுவதே, ஆண்-பெண் இருபாலருக்குமான கடமை. ஆண்-பெண் குழந்தைகள் இருபாலரையும் ஒழுக்கம், கண்ணியம் நிறைந்த வழிகாட்டுதலே சமூக குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு சான்றாக அமையும் என்பதை பெண் குழந்தைகள் தினமான இன்று மனதில் உறுதிகொள்வோம்.
-அ.கிளுர், இணை ஆசிரியர், I TAMIL NEWS