வேலூரில், பால் வியாபாரி (milk vendor) ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள புதூர்கொல்லை மேடு பகுதியில், 41 வயதாகும் நாகேஷ் என்ற நபர் வசித்து வந்தார். இவர், கடந்த 5 ஆண்டுகளாக மேஸ்திரி தோப்பு பகுதியில் பால் கொள்முதல் (milk vendor) நிலையம் நடத்தி வந்துள்ளார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் கடந்த 15 ஆண்டுகளாக வீடு, வீடாகச் சென்று பால் கொள்முதல் செய்து வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையில், பால் கொள்முதல் செய்து, விற்பனை செய்வதில் தொழில் போட்டி ஏற்பட்டு விரோதம் வளர்ந்து வந்துள்ளது. இதனால், அவ்வப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வழக்கம் போல நேற்று முன்தினம் நள்ளிரவில் நாகேஷ் பால் கொள்முதல் நிலையத்தை மூடிவிட்டு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த மர்ம நபர் அவரது மார்பின் மீது தாக்கி, கத்தியால் கழுத்து பகுதியில் வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நாகேஷை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த போது நாகேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், நாகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொழில் போட்டியால் நாகேஷ் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பால் வியாபாரி உள்ளிட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த நாகேஷின் 37 வயது மனைவி கிரிஜா, 17 வயது மகள் ஹரிணி, 13 வயது மகன் விஜயகுமார் ஆகியோர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.