தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுத்துறை, போக்குவரத்து துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பத்திரப்பதிவுத்துறை அலுவலகம், வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்துவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலையில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் மூன்றரை லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் வண்டிக்கார தெரு பகுதியில் செயல்படும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணக்கில் வராத 5 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், சென்னை தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் கணக்கில் வராத 51 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.மேலும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 950 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது போன்று சேலம், கடலூர், வேலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்ட திடீர் அதிரடி சோதனையில் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 26,99,335.00 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது.
அதிகபட்சமாக திருவண்ணாமலை ஏடி டவுன் பிளானிங் அலுவலகத்தில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், வேலூர் கூடுதல் உதவி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் , 1 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது.