அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு, விழுப்புரத்தில் இருந்து, வேலூர் நீதிமன்றத்திற்கு ஏன் மாற்றப்பட்டது?வேலூர் நீதிமன்றத்தில் அவசர தீர்ப்பளிக்கப்பட்டது எப்படி? என்று வானதி ஸ்ரீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு தடை விதித்து, அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்க, உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது?
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஊழல் வழக்கை விசாரிக்க, விழுப்புரம் நீதிபதிக்கு தடை விதிக்க வேண்டிய அவசரம் என்ன? ஒரு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்கை, வேறு மாவட்டத்துக்கு மாற்ற, இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற நிர்வாகக் குழுவுக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எழுப்பியுள்ளார்.
பாஜக தேசிய மகளிரணித் தலைவராக, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக மட்டுமல்லாது, ஒரு வழக்கறிஞராக, எப்போதும் சட்ட மாணவியாக, இந்திய ஜனநாயகத்தின் மீது பெருமதிப்பு கொண்டிருக்கும் நாட்டின் பிரஜையாக இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்.
அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு, விழுப்புரத்தில் இருந்து, வேலூர் நீதிமன்றத்திற்கு ஏன் மாற்றப்பட்டது?வேலூர் நீதிமன்றத்தில் அவசர தீர்ப்பளிக்கப்பட்டது எப்படி?அவசரமாக விசாரணை நடத்தப்பட்டு
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. க.பொன்முடி,
கடந்த 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி, மாமியார் மற்றும் நண்பர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2002-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
இதனை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம், பொன்முடி உள்ளிட்டோரை 2004-ம் ஆண்டு விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்ய, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு மீண்டும் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 169 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கை விரைந்து முடிக்க, கடந்த 2022 மே மாதத்தில், நான்கு விடுமுறை நாட்களில் விசாரணை நடத்த அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி கடிதம் அனுப்பினார். இந்த கோரிக்கையை 2022 ஜூன் 7-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதுமட்டுமல்லாது, மறு உத்தரவு வரும் வரை, இந்த வழக்கில் விசாரணை நடத்த தடையும் விதித்தது.
அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களின் நிர்வாகத்திற்கான, உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர், இந்த வழக்கை, வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றினர். இந்த உத்தரவு, தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு, 2022 ஜூலை 8-ம் தேதி அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், 2022 ஜூலை 12-ம் தேதி, பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை வேலுார் நீதிமன்றத்துக்கு மாற்றி, உயர் நீதிமன்றம், அலுவல் ரீதியான உத்தரவை பிறப்பித்தது.
அதன்படி, 2022 ஜூலை 16-ம் தேதி வேலுாருக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கை, மாவட்ட முதன்மை நீதிபதி வசந்த லீலா விசாரித்தார். ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பில் இருந்த இந்த வழக்கு, 2023 ஜூன் 6-ம் தேதி வேகமெடுத்தது. அதுவரை விசாரணைக்கு வராமல் வாய்தா வாங்கிக் கொண்டிருந்தவர்கள், வேலூர் நீதிமன்றத்தில் வரிசை கட்டி நின்றனர்.
ஜூன் 23-ம் தேதி எழுத்துப்பூர்வ வாதங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.நான்கு நாட்களில், 172 சாட்சிகள், 381 ஆவணங்களை பரிசீலித்து, பொன்முடி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து, 226 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை, வேலுார் மாவட்ட முதன்மை நீதிபதி பிறப்பித்துள்ளார். அதை தொடர்ந்து ஜூலை 30-ம் தேதி ஓய்வு பெற்றுள்ளார்.