மகளிர் உரிமைத்தொகை குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை கிடையாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள எம்.கே.தி.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 11 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜ கண்ணப்பன், செஞ்சி மஸ்தான்,மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,அரசின் சார்பாக 5 லட்சம் மாணவர்களுக்கு 234 கோடி செலவில் வருடம் தோறும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்படுகிறது என்றார். மேலும், மாணவர்கள் இதை இலவசமாக பார்க்க கூடாது உங்கள் கல்விக்கு கிடைத்திருக்கக்கூடிய உதவிக்கரம் என்று நினைக்க வேண்டும். உங்களுக்கு தாயாக தந்தையாக முதலமைச்சர் மற்றும் திராவிட மாடல் அரசு என்றும் இருக்கும் எனவும், மாணவர்கள் எதற்கும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
80 சதவீத மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்று அண்ணாமலை சொல்கிறாரே என்ற கேள்விக்கு? ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பாஜக ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் ரூபாய் பொதுமக்களின் வங்கி கணக்கில் தரப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார் ஆனால் 15 ரூபாய் ஆவது கொடுத்தாரா எனவே மகளிர் உரிமைத்தொகை குறித்து பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை.
ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கும் நிலையில் கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார்.
அரசு இலவசமாக வழங்கும் மிதிவண்டிகளை மாணவர்கள் விற்று விடக் கூடியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் மிதிவண்டிகளை விற்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.