கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் சுமார் ஒரு 1 கோடிக்கும் அதிகமான பெண்களின் வங்கிக்கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் சில பேரின் விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்களை கூறி நிராகரிக்கப்பட்டது.
இதனால், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் வருத்தத்தில் இருந்த சூழ்நிலையில்,
அவர்கள் அனைவரும் மீண்டும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்காக கலெக்டர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாகவும் வாட்ஸ் அப்பில் தகவல் ஒன்று வேகமாக பரவியுள்ளது.
அதில், “மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்காதவர்கள் அதனை பெறுவதற்காக மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கவும், உடனே அனைவருக்கும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இன்று மற்றும் வருகிற திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தகவல் வாட்ஸ் அப்பில் தீயாக பரவிய நிலையில், இதனை நம்பிய பெண்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்தனர்.
இதையும் படிங்க : உதயநிதி சொன்ன நீட் ரத்து ரகசியம் வெளியே வருமா? – எடப்பாடி பழனிசாமி!!
அதிலும் குறிப்பாக, நெல்லை, விழுப்புரம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் குவிந்தனர்.
இந்த சூழலில் அந்த பெண்களிடம் வாட்ஸ் அப்பில் வரும் தவறான தகவலை நம்பி யாரும் வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினார். ஆனால், இதனை ஏற்க மறுத்த பெண்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆட்சியர் அலுவலகங்களில் சிறிது பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே, தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.