மறைமுக நெருக்கடிகளும், அரசியல் அழுத்தங்களும் நீதிமன்றங்களை முற்றுகையிடுகிறதா? என கர்நாடகா ஹிஜாப் விவகார தீர்ப்பு குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினரும் தமிமுன் அன்சாரி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
“கர்நாடக மாநிலம் உடுப்பியில் குந்தாப்புரா அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் வழக்கம் போல் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில், அக்கல்லூரி முதல்வர் அதற்கு தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக மாநில பாஜக அரசு மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை என அறிவிப்பு செய்தது.
இதனால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையம் வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு கடும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை என்பதால், ஹிஜாபுக்கு எதிராக கர்நாடக அரசின் தடை செல்லும் என தீர்ப்பளித்திருக்கிறது.இஸ்லாம் என்பது ஒரு வாழ்வியல் மார்க்கம். அது மக்களுக்கு பல அறிவுரைகளை, வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறது.
சமூகத்தை ஒழுங்குப்படுத்தும் உயரிய பணிகளில் ஒன்றாக கலாச்சார பாதுகாப்பை வலியுறுத்துகிறது.அந்த வகையில் ஹிஜாப் அணிவது என்பது பெண்ணியமும், அவர்களின் கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது.
அதை விரும்பி அணிபவர்களுக்கு இடையூறு விளைவிக்கக்கக் கூடாது என்பதை முந்தைய நீதிமன்ற தீர்ப்புகள் விளக்கியிருக்கின்றன.
ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக, சட்டத்தின் அடிப்படையில் துல்லியமான வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலும், கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது கட்டாயம் இல்லை என்ற ‘அரிய கண்டுபிடிப்பையும்’ கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இது ஒரு வரம்பு மீறல் என்பதில் ஐயமில்லை. சட்டத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்பு ஏற்க முடியாததாக இருக்கிறது.சமீப வருடங்களாக தீர்ப்பு வேறு, நீதி வேறு என்ற முரண்பாடுகள் நமது நாட்டின் நீதிமன்றங்களில் உருவாகி வருவதை காண முடிகிறது.
மதவாத அச்சுறுத்தல்களும், மறைமுக நெருக்கடிகளும், அரசியல் அழுத்தங்களும் நீதிமன்றங்களை முற்றுகையிடுகின்றனவா? என்ற கேள்விகள் அனைவர் மனதிலும் எழுகிறது.
சட்டங்களை ஆய்வு செய்து, மூளையால் சிந்தித்து, இதயத்தால் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என நாடு எதிர்பார்க்கிறது. நீதியும், உரிமையும் மறுக்கப்படும் போது மக்கள் எழுச்சி இயல்பாக பீறிடுவதை வரலாறு எடுத்தியம்புகிறது.
இது நீதிபதிகளுக்கு தெரியாததல்ல. இத்தருணத்தில் முஸ்லிம் சமூகம் நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை.பெரும்பான்மை இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் சிறுபான்மையினரின் உணர்வுகளோடு ஐக்கியப்பட்டு கவலைகளை பகிர்ந்து வருவதை எண்ணிப் பார்த்து ஆறுதல் பெற வேண்டும். மேலும் இது இறுதியான தீர்ப்பும் அல்ல.உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
ஃபாசிசத்தின் ஆக்கிரமிப்பு கரங்கள் நீளும் போது, ஜனநாயக வழியில் சளைக்காமல் போராடுவது காலத்தின் கட்டாயமாகிறது. இது போன்ற தருணங்களில் அனைத்து மக்களின் ஆதரவையும் திரட்டி ; உறுதியான நெஞ்சுரத்தோடு ; உன்னதமான கொள்கைகளோடு பயணிப்பதே காலம் வழங்கும் அறிவுரை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.