இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது
குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம் செய்வது மகத்தான செயலாக பார்க்கப்படுகிறது. ஆனால், பல நேரங்களில் சரியான உடல் உறுப்பு கிடைக்காததால் உயிரிழப்புகள் நிகழ்வதுண்டு. இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்பை பெறும் திட்டம், தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் யாராவது மூளைச் சாவு ஏற்பட்டு, அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தால், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வழியாக முன்னுரிமை வரிசை அடிப்படையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அவர்கள் பதிவுசெய்த மருத்துவமனைக்கு வழங்கப்படும்.
மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம். இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.
உடல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்யும் உரிமத்தை பெற்ற மருத்துவமனைகளை அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது