நாட்டில் தற்போதைய கொரோனா பரவல் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்துக் கொண்டனர்.
காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தொற்று, பெட்ரோல்- டீசல் விலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது பேசிய பிரதமர் மோடி;
குடிமக்களின் சுமையை குறைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது.
மாநிலங்கள் தங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். சில மாநிலங்கள் வரிகளை குறைத்துள்ளன. ஆனால் சில மாநிலங்கள் குறைக்காததால் மக்களுக்கு எந்த பலனையும் தரவில்லை. பல மாநிலங்களில் பெட்ரோல் – டீசல் விலை ரூ.100 தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பணவீக்கம் பல குடும்பங்களை பாதிப்படைய செய்கிறது. இது ஒரு வகையில் மாநில மக்களுக்கு செய்யும் அநீதிதான். இது அண்டை மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என பேசியிருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதிலளித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிக்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வில்லை என்றும், மாநில அரசு குறைக்காத காரணத்தினால் தான், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியவில்லை என பிரதமர் சொல்கிறார். பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக பேசியுள்ளார்.
சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பெட்ரோல் மீதான வரியை குறைத்து வேடம் போட்டது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசுக்கு முன்னாடியே பெட்ரோல் மீது விலையை மாநில அரசு குறைத்தது தமிழக அரசு. யார் பெட்ரோல் விலையைக் குறைத்தார்கள், யார் பெட்ரோல் விலையைக் குறைப்பதாக நடித்தார்கள் என மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்று முதல்வர் தெரிவித்தார்.