செங்கல்பட்டு அருகே நெடுஞ்சாலையில் அரசு பேருந்து, லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்துள்ளது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே நின்று கொண்டிருந்த லாரியின் மீது வேகமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து பேருந்தில் சிக்கிய பயணிகள் உதவி கேட்டு அலறியுள்ளனர்.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பொதுமக்களின் உதவியுடன் பேருந்தில் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே நெடுஞ்சாலையில் அரசு பேருந்து, லாரி மீது மோதிய விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அரசு பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.